
தஞ்சை ஸ்ரீ ஸ்ரீ சீரடி சாயிபாபா ஆலயத்தினை நிர்வகித்து வரும்
ஸ்ரீ ஸ்ரீ சீரடி சாயிபாபா அறக்கட்டளை மூலம் ஆலயம் மற்றும் அறக்கட்டளை பற்றிய விவரம்
ஸ்ரீ ஸ்ரீ சீரடி சாயிபாபா ஆலயம் தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகில் மேலவெளி கிராம எல்லையில் புல எண்கள் 239 மற்றும் 240-ல் அமைந்துள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ சீரடி சாயிபாபா அவர்கள் தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தஞ்சாவூரில் தங்குவது என்ற நிலையில், சாயிபாபா சிலையும் அமரும் கல்லும் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய மரப்பெட்டியில் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அதனை திரு. கே.டி. பாலசுப்ரமணிய ஐயர் தனது மேற்கண்ட இடத்தில் ஒரு பகுதியில் சிறு கோயில் கட்டி, 1950-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தார். இவ்வாறு முதன்முதலாக தஞ்சையில் ஸ்ரீ ஸ்ரீ சீரடி சாயிபாபா ஆலயம் அமைந்து பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்தது.
பின்பு பல்வேறு காலக்கட்டங்களில் தனியார் வசம் இருந்து வந்த ஆலயத்தினை முனைவர் திரு. குரு கோவிந்தராஜன் அவர்கள், சாய் பக்தர்கள் திரு. புகழேந்தி, திரு. குருநாதன் மற்றும் இதர சாய் பக்தர்கள் துணைகொண்டு தடையின்றி பூஜைகள் நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டதால், உரிய முறையில் பூஜைகள் நடைபெற்று வந்தன.
ஸ்ரீ ஸ்ரீ சீரடி சாயிபாபா ஆலயத்தினை அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழவும், இன, மத, மொழி வேறுபாடில்லாமல் அனைவரும் இறை மக்கள் என்ற எண்ணத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளவும், புதியதாக ஆலயம் கட்டவும் இதர சமுதாய பணிகள் மேற்கொள்ளவும், தற்போதைய நிர்வாக அறங்காவலர்களான திரு. கே.டி. பாலசுப்ரமணிய ஐயரின் மகன் திரு. கே.பி. சுவாமிநாதன் மற்றும் திரு. குரு கோவிந்தராஜன் அவர்களை கார்த்தர்களாகக் கொண்டு 28.01.2002-ல் ஸ்ரீ ஸ்ரீ சீரடி சாயிபாபா அறக்கட்டளை, டிரஸ்ட் சட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது (பதிவு எண் 43, நாள் 28.02.2002). மேலும் இவ்வறக்கட்டளை வருமான வரி சட்டத்தின் கீழ் திருச்சி வருமான வரி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சீட்மல்பாக்கம் பூஜ்ய ஸ்ரீ விபூதி பாபா, பூஜ்ய ஸ்ரீ கரூர் நரசிம்ம பாபா ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் இவ்வாலயத்திற்கு வந்து புதியதாக ஆலயம் கட்ட ஆசி வழங்கியதைத் தொடர்ந்து, பல்வேறு சாய் பக்தர்களின் கனவு நிறைவேறும் வகையில் அறக்கட்டளையினால் முதல் கட்டமாக புதிய வலம்புரி விநாயகர் ஆலய குடமுழுக்கு 01.02.2002-ல் நடைபெற்றது.
திரு. கே.டி. பாலசுப்ரமணிய ஐயரின் குடும்பத்தார் மற்றும் பலரிடம் நன்கொடை பெறப்பட்டு, 17.03.2003 மற்றும் 30.10.2003 தேதிகளில் மொத்தம் 35,225 சதுர அடி நிலம், பழைய ஆலயம் மற்றும் சுற்றியுள்ள இடங்களுடன் சுமார் ரூ. 21.88 இலட்சம் செலவில் வாங்கப்பட்டது. புதிய ஆலயம் சுமார் 4,200 சதுர அடி பரப்பளவில் ரூ. 38.00 இலட்சம் செலவில் கட்டப்பட்டு, 01.06.2006-ல் குடமுழுக்கு நடைபெற்றது.
மேற்கண்ட பணிகளுக்கு சென்னை ஸ்ரீ ஸ்ரீ சீரடி சாய் அறக்கட்டளையின் சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் திரு. கே.வி. ரமணி அவர்கள் பெருமளவில் நன்கொடை வழங்கி, தஞ்சை ஆலயம் மூலம் சீரடி சாயியின் பெருமையினை தஞ்சை மற்றும் இதர பகுதிகளில் தெரியவர உதவி புரிந்தார். மேலும் ஆலயத்தில் தினந்தோறும் அன்னதானம் நடைபெற மாதந்தோறும் சென்னை அறக்கட்டளை மூலம் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.
தஞ்சை ஸ்ரீ ஸ்ரீ சீரடி சாயிபாபா அறக்கட்டளை மூலம் சமுதாய பணியாக நலிவடைந்தோர்க்கு தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. நலிவடைந்த முதியோருக்கு மருத்துவ வசதி, சென்னை திரு. ஜெகதீப் அவர்கள் மூலம் இலவச நிவாரண முகாம், வேலூர் சாயி மானிக்கம் பாபா அவர்கள் மூலம் விபூதி பிரசாத முகாம், டாக்டர் வெங்கட சுப்பிரமணியன் குழுவினரால் இலவச ஆயுர்வேத முகாம், லயன்ஸ் கிளப் மூலம் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இதர நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன.
அனைவரும் இறை மக்கள் என்ற எண்ணத்தில் வழிபட உரிய சூழ்நிலை இவ்வாலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், வெளியூர்களிலிருந்து பல பக்தர்கள் சாயிபாபாவைத் தரிசித்து வருகின்றனர். வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெருமளவில் பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வந்து வழிபட்டு பயன் பெற்று வருகிறார்கள்.
அறக்கட்டளையின் அடுத்த முயற்சியாக அன்னதானக் கட்டிடம் கட்டப்பட்டது. பக்தர்கள் மற்றும் திரு. முரளி வெங்கடேசன் அவர்களின் பெரும் நன்கொடையுடன் ரூ. 6.50 இலட்சம் செலவில் 1,500 சதுர அடி பரப்பளவில் அன்னதானக் கட்டிடம் கட்டப்பட்டு 18.06.2007 அன்று திறக்கப்பட்டது. அன்றிலிருந்து தினந்தோறும் இரண்டு வேளையும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ ஸ்ரீ சீரடி சாயிபாபா ஆலயத்தில் தினந்தோறும் சீர்டியைப் போல் நான்கு வேளை ஆரத்தி நடைபெறுகிறது. காலை 6.00 மணிக்கு காலை ஆரத்தி, நண்பகல் 12.00 மணிக்கு மத்தியான ஆரத்தி, மாலை 6.00 மணிக்கு மாலை ஆரத்தி, இரவு 8.00 மணிக்கு இரவு ஆரத்தி. ஆலயம் பக்தர்களின் தரிசனத்திற்காக காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ராமநவமி, குரு பூர்ணிமா, பாபா மகாசமாதி புண்ணிய திதி உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. வருடாவருடம் வருஷாபிஷேகமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தஞ்சை சீரடி சாயிபாபா ஆலயத்தில் கருணாமூர்த்தியான சாயிபாபா பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். பல பக்தர்கள் இங்குள்ள துணியிலிருந்து உதி பெற்று உடல் நோய்கள் நீங்கியதாகத் தெரிவித்துள்ளனர். வேலை கிடைத்ததாகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்ததாகவும் பலர் கூறியுள்ளனர்.
எனவே அனைவரும் இவ்வாலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீ சாயிநாதனின் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆலய வளர்ச்சிப் பணிகளுக்கும் தினந்தோறும் நடைபெறும் அன்னதானத்திற்கும் நன்கொடை வழங்குமாறு வேண்டுகிறோம்.
ஜெய் சாய் நாத்